முட்டாளை மணந்த இளவரசி

                   
       ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் மிகுந்த அறிவுடையவளாக விளங்கினாள். யார் பேசினாலும் தன் அறிவு கூர்மையால் அவர்களை மடக்கி விடுவாள் அவள். இளவரசி திருமணப் பருவம் அடைந்தாள். தன் மகளுக்கு யாரைத் திருமணம் செய்து வைப்பது என்று சிந்தித்தான் அரசன். தந்தையே! இளவரசனாக இருந்தாலும் சரி, ஏழைப் பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி. பேச்சாற்றலில் யார் என்னை வெற்றி கொள்கின்றாரோ அவரையே மணப்பேன் என்றாள் அவள். இந்தச் செய்தி பல நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. பல நாட்டு இளவரசர்களும் அறிஞர்களும் போட்டியில் கலந்து கொள்ள அரண்மனைக்கு வந்தனர். வந்த ஒவ்வொருவரையும், சிறிது நேரத்திற்குள் தோற்கடித்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தாள் இளவரசி. நாள் தோறும் ஏராளமான கூட்டம் அரண்மனைக்கு வந்த வண்ணம் இருந்தது. இப்படியே சென்றால் நாட்டில் உள்ள எல்லோருடனும் இளவரசி பேச வேண்டி இருக்கும். வருகின்ற கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது? பொழுது போக்குவதற்காக இங்கு வருபவர்களை எப்படித் தடை செய்வது என்று குழம்பினான் அரசன். போட்டியில் வென்றால் திருமணம், தோற்றால் நூறு கசையடி, என்று நாடெங்கும் முரசறைந்து தெரிவிக்கச் சொன்னான் அவன். இதனால் இளவரசியுடன் போட்டியிட வருகின்றவர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. வந்தவர்களும் தோற்றுக் கசையடி வாங்கிக் கொண்டு சென்றனர். அந்த நாட்டில் பிச்சைக்கார இளைஞன் ஒருவன் இருந்தான். இளவரசியை மணப்பதற்காக நிகழும் போட்டியைப் பற்றி அறிந்தான் அவன். முயற்சி செய்து பார்ப்போம். நல்ல வாய்ப்பு இருந்தால் இளவரசியை மணப்போம். இல்லையேல் கசையடி வாங்கி இறந்து விடுவோம் என்று நினைத்தான் அவன். தன் ஊரில் இருந்து தலைநகரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான் அவன். நீண்ட தூரம் நடந்தான் அவன். இறந்து போன கோழி ஒன்று வழியில் கிடந்தது. இது எதற்காவது பயன்படும் என்று நினைத்தான் அவன், தன் தோளில் கிடந்த சாக்குப் பைக்குள் அந்தக் கோழியைப் போட்டான். இன்னும் சிறிது தூரம் நடந்தான். வழியில் கிடந்த சிறு தொட்டியில் அவன் கால் இடறியது. அந்தத் தொட்டியையும் எடுத்துசூ சாக்குப் பைக்குள் போட்டுக் கொண்டான். வழியில் மாடு ஆடுகளைக் கட்டும் தடி ஒன்று கிடந்தது. குதிரையின் கால் குளம்பு கிடந்தது. பல வளைவுகளை உடைய ஆட்டின் கொம்பு ஒன்று கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்துப் பைக்குள் போட்டுக் கொண்டான். சாக்குப் பையைத் தூக்கிக்கொண்டு மெல்ல நடந்து அரண்மனையை அடைந்தான் அவன். காவலுக்கு இருந்த வீரர்கள் கந்தல் ஆடையுடன் காட்சி அளித்த அவனைக் கண்டு சிரித்தனர். இளவரசியுடன் போட்டியிட வந்துள்ளேன். என்னை உள்ளே விடுங்கள், என்றான் அவன். பிச்சைக்காரனாகிய உனக்கு என்ன தெரியும்? நீயா இளவரசியுடன் போட்டியிடப் போகிறாய் என்று கேலியாகக் கேட்டான் வீரன் ஒருவன். என் மூக்குக்குக் கீழே வாய் உள்ளது. வாய்க்கு உள்ளே நாக்கு உள்ளது. என் திறமையான பேச்சினால் இளவரசியை வெல்வேன், என்றான் அவன். உம்மைப் போன்ற முட்டாளிடம் இளவரசி பேச மாட்டார். நீ திரும்பிச் சென்று நல்ல அறிவு பெற்று மீண்டும் இங்கே வா, என்றான் இன்னொரு வீரன். நான் இங்கிருந்து நகர மாட்டேன், போட்டியிட வந்திருக்கிறேன். இளவரசியிடம் சொல் என்று உறுதியுடன் சொன்னான் அவன். வீரர்கள் இளவரசியிடம் சென்றார்கள். பிச்சைக்கார இளைஞன் ஒருவன் போட்டிக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். விளையாடுவதற்காக அந்த முட்டாள் இங்கு வந்திருக்கிறான். நன்கு அவமானப்படப் போகிறான். அவனை இங்கு அனுப்பி வையுங்கள், என்றாள் கோபத்துடன் அவள். பிச்சைக்காரன் உள்ளே நுழைந்தான். இளவரசியைப் பணிவாக வணங்கினான். பனிக்கட்டியை விட குளிர்ந்த கைகளை உடைய இளவரசியாரே வணக்கம், என்றான் அவன். என் கைகள் குளிர்ச்சியாக இல்லை. சூடாக உள்ளது. இந்தச் சூட்டில் ஒரு கோழியை வறுபட்டு விடும். இது உனக்குத் தெரியுமா? என்று வெடுக்கெனப் பதில் தந்தாள் அவள். அப்படியா? கோழி வறுபடுமா என்று பார்க்கிறேன், என்ற அவன் சாக்குப் பைக்குள் கையை விட்டான். செத்த கோழியை வெளியே எடுத்தான்.  எதிர்பாராதது நடந்ததைக் கண்ட அவள் திகைத்தாள், தன் திகைப்பை மறைத்து கொண்டு சூடு பட்டால் கோழியின் கொழுப்பு ஒழுகுமே, என்றாள். பைக்குள் கைவிட்டுத் தொட்டியை எடுத்தான் அவன் ஒழுகுவதை இதற்குள் பிடித்துக் கொள்ளலாம், என்றான். தொட்டி விரிசல் விட்டிருந்தால் ஒழுகுமே என்றாள் அவள். குதிரைக் குளம்பை எடுத்த அவன், விரிசல் உள்ள பகுதியில் கீழே இதை வைத்து அடைத்து விடலாம், என்றான். எப்படி எதிர்க் கேள்வி கேட்டாலும், பதில் வைத்திருக்கிறானே என்று நினைத்தாள் அவள். தொட்டியை விட குளம்பு பெரிதாக இருக்கிறது. எப்படித் தொட்டியை அதனால் நெருக்க முடியும்? என்று கேட்டாள் அவள். தடியை வெளியே எடுத்தான் அவன். இதைப் பயன்படுத்திக் குளம்பிற்குள் தொட்டியை இறுக்கமாகப் பொருத்த முடியும், என்றான் அவன். ஏறுமாறான கேள்விகளுக்குத் தக்க பதில் தருகிறானே. அவன் கை ஓங்கி வருகிறதே, என்று திகைத்தாள் அவள். அவனை மடக்க நினைத்த அவள், இளைஞனே! நான் என்ன சொன்னாலும் அதை வேறொன்றாகத் திருப்பி விடுகிறாய். நாக்கு பல திருப்பங்கள் இருப்பது போல நீ நடந்து கொள்கிறாய், என்றாள் அவள். தன் பைக்குள் கையை விட்ட அவன் ஆட்டுக் கொம்பை எடுத்தான். அதை அவளிடம் காட்டி, இதைவிட அதிக திருகுகள் உள்ளதைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டான். அவள் என்ன பதில் சொல்வது என்று சிந்தித்தாள். நீண்ட நேரம் ஆயிற்று. அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. பிறகென்ன, இளவரசிக்கும் அவனுக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.  

No comments: