COMPUTER TIPS - கேள்வி - பதில்

1


கேள்வி: சி.டி. மற்றும் டி.வி.டிக்களில், பதியப்படும் பளபளப்பான பக்கத்தில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படக் கூடாது என்றும், மற்ற பக்கத்தில் அந்த அளவிற்கு பாதுகாப்பு தேவை இல்லை என்றும் சொல்கின்றனர். இதில் எதில் ஆபத்து மிக அதிகம்? அதாவது எந்தப் பக்கம் ஸ்கிராட்ச் ஏற்பட்டால், பதியப்பட்ட டேட்டா கெட்டுவிட வாய்ப்புண்டு.?

பதில்:
 பலருக்கு, இப்போது தரப்படும் பதில் நல்ல படிப்பினையைத் தரும். பளபளப்பான பக்கத்தைக் காட்டிலும், தலைப்பு அல்லது படம் அச்சிடப்பட்ட வேறு பக்கத்தில் ஸ்கிராட்ச் ஏற்படுவதுதான் அதிக பாதிப்பை உண்டு பண்ணும். லேபிள் ஒட்டப்படும் பக்கத்தின் கீழாக, மிக மெல்லிய அலுமினிய பூச்சினை அடுத்தே டேட்டா பதியப்படுகிறது. எனவே இதில் ஸ்கிராட்ச் ஏற்பட்டால், சரி செய்திட முடியாது. பளபளக்கும் பக்கத்தில் ஏற்படும் கோடுகளைக் கூட சரி செய்திடலாம். இதில் முடியாது. எனவே மேற்புறம், கீழ்புறம் என இரு பக்கத்திலும் கீறல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதே நல்லது.

 
2


கேள்வி:  நான் விண்டோஸ் 8.1 சிஸ்டம் வைத்துள்ளேன். விண்டோஸ் 8.1.1. வந்துள்ளதாகப் படித்தேன். ஆனால், அப்டேட் சென்றால், செய்திட முடியவில்லை. ஏன்? அதற்கான வழி என்ன?
 

பதில்: கம்ப்யூட்டரை இயக்கி, அதன் மெட்ரோ ஸ்கிரீன் திரையில் “check updates” என்று டைப் செய்திடவும். அல்லது, டெஸ்க்டாப் நிலையில், Search Charm என்பதனைத் திறக்கவும். “check updates” என்று டைப் செய்திடவும். ஐகான் மீது தட்டவும். Update மற்றும் recovery திறக்கப்படும். check now என்பதில் தட்டவும். இப்போது விண்டோஸ் ஏதேனும் அப்டேட் செய்திட வேண்டுமா என்று உங்கள் கம்ப்யூட்டரை சோதனை செய்திடும். நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் Automatic Update இயங்கிய நிலையில் அமைத்திருந்தால், அனைத்து அப்டேட் பைல்களும் இயக்கப்பட்டு, அனைத்தும் அப்டேட் ஆகி இருக்கும். Update history என்பதில் கிளிக் செய்தால், எந்த அப்டேட் பைல்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்ற பட்டியல் கிடைக்கும். இதில் உங்கள் சந்தேகம் தீர்ந்துவிடும்.

3



கேள்வி: புதியதாக வாங்கிய லேப் டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. தொடுதிரை இல்லாமல், மவுஸ் மற்றும் கீ போர்ட் கொண்டு பயன்படுத்தி வருகிறேன். இதில் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திட எளிதான வழி என்ன? ஏற்கனவே நான் விண்டோஸ் 7 பயன்படுத்தி வந்தேன். அதில் உள்ளது போல ஸ்டார்ட் மெனு இதில் மறைத்து வைத்து தரப்பட்டுள்ளதா? ஸ்டார்ட் மெனு பெற வழி என்ன?

பதில்:
 புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பதால் மட்டுமல்ல; விண்டோஸ் 8 சிஸ்டம் பல புதிய வழிகளில் சில சாதாரணமான செயல்பாடுகளைக் கூட மாற்றி உள்ளது. எனவே தான் இந்தத் தடுமாற்றம். ஆனால், பழகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Power options பட்டன் சார்ம்ஸ் பாரில் (Charms Bar) உள்ள செட்டிங்ஸ் (Settings) உள்ளாக அமைந்துள்ளது. இதனை உங்கள் மவுஸினை, திரையின் மேல் அல்லது கீழ் வலது மூலையில் கொண்டு சென்று பெறலாம். செட்டிங்ஸ் பிரிவினைத் திறக்க, விண்டோஸ் லோகோ “டி” கீயினை கீயுடன் இணைத்து இயக்கலாம். இங்கு உங்களுக்கு சிஸ்டம் முடித்து வைக்க ஆப்ஷன்கள் தரப்படும்.

அடுத்து, உங்கள் விண்டோஸ் 7 விருப்பத்திற்கு வருவோம். நீங்கள் குறிப்பிடுவது போல ஸ்டார்ட் மெனு மறைத்து வைக்கப்படவில்லை. எனவே தர்ட் பார்ட்டி மூலம் அதனை அமைத்துக் கொள்ளலாம். அதில் கிடைத்தது போல, ஸ்டார்ட் மெனு வேண்டும் எனில், இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம். www.classicshell.net என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் Classic Shell என்ற புரோகிராம் அல்லது www.areaguard.com என்ற முகவரியில் உள்ள StartW8 என்ற புரோகிராம் ஸ்டார்ட் மெனுவினைத் தரும். 

இன்னொரு வழியும் உள்ளது. கம்ப்யூட்டரில் உள்ள பவர் பட்டனைச் சிறிது நேரம், ஐந்து விநாடிகள், அழுத்தியவாறு இருந்தால், கம்ப்யூட்டர் சிஸ்டம் ஆப் ஆகும். ஆனால், அதற்கு முன்னால், விண்டோஸ் எக்ஸ்புளோரர் உட்பட, அனைத்து புரோகிராம்களையும் சேவ் செய்து மூடி முடித்து வைத்திருக்க வேண்டும்
 
4

கேள்வி: என்னிடம் உள்ள கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயங்குகிறது. இதன் டாஸ்க் பாரில் இருக்கும் கடிகாரம் அருகே, அன்றைய நாளின் பெயர் வரவேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும்? எடுத்துக் காட்டாக, Wednesday, July 9 என வேண்டும் என்றால், எப்படி செட் செய்திட வேண்டும்?

பதில்: 
ஏற்கனவே மாறா நிலையில் அவ்வாறு தானே இருந்திருக்க வேண்டும். பரவாயில்லை அமைத்துவிடலாம். முதலில் Control Panel செல்லவும். அடுத்து, Region and Language பிரிவில் “Additional Settings என்பதில் கிளிக் செய்தால், Customize Format என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் Date என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் எந்த மாதிரி பார்மட்டில் தேதி, கிழமை இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதே போல அமைத்திட அனைத்து ஆப்ஷன்களும் தரப்பட்டிருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். உங்கள் விருப்பத்திற்காக, நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஆப்ஷன் “dddd, MMMM, dd” ஆகும்

 
5


கேள்வி: என்னிடம் வேர்ட் 2007 உள்ளது. இதில் ஹெல்ப் பட்டன் எப்1 அழுத்தினால், இணைய இணைப்பில் ஆன்லைன் உதவிக் குறிப்புகள் மட்டுமே கிடைக்கும் என்பது போன்ற செய்தி கிடைக்கிறது. அப்படியானால், ஆப் லைன் உதவிக் குறிப்புகள் இனி கிடைக்காதா? கிடைக்க வேண்டும் என்றால், என்ன மாற்றங்கள் செய்திட வேண்டும்?
 


பதில்வேர்ட் புரோகிராம் தரும் உதவிக் குறிப்புகளைப் பொறுத்தவரை, இணையத்திலிருந்தும், இல்லாமல் ஆப் லைனிலும், குறிப்புகளைத் தரும். உங்கள் கம்ப்யூட்டரில் இது சரியாக செட் செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். சரி செய்திட கீழ்க்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவும். 

1. முதலில் எப்1 கீயை அழுத்தவும். வேர்ட் இப்போது வேர்ட் ஹெல்ப் (Word Help) டயலாக் பாக்ஸைக் காட்டும். 
2. அடுத்து கீழாக உள்ள Connected to Office Online என்பதில் கிளிக் செய்திடவும். 
3. தொடர்ந்து Show Content Only From this Computer என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது அதில் காட்டப்படும் ஸ்டேட்டஸ் பார் Offline எனக் காட்டும். 

இந்த மாற்றங்களை ஏற்படுத்தி ஹெல்ப் சிஸ்ட்த்தினை நீங்கள் விரும்பும் வகையில் பயன்படுத்தலாம்.
 

6

கேள்வி: சீனாவில் க்யூ க்யூ சர்ச் தளம் ஒன்று மிகவும் பிரபலமானதாகவும், தேடல் வழிகளுக்குத் தீர்வு தருவதாகவும் படித்தேன். இதனை இணையத்தில் அணுக இயலவில்லை. அதன் இணைய முகவரி தரவும். அது பற்றிய சிறிய குறிப்பும் தரவும். நாம் பயன்படுத்த முடியுமா?
 

பதில்: நீங்கள் குறிப்பிடும் தளம் சீனாவில் பிரபலமானது. இது ஒரு தகவல் களஞ்சிய தளம் மற்றும் தேடல் தளமாகும். இதன் முகவரி http://www.qq.com/(இணைத்துள்ள படத்தினைப் பார்க்கவும்.) இதனை Tancent என்ற சீன நிறுவனம் உருவாக்கி தந்துள்ளது. இன்ஸ்டண்ட் மெசேஜ் தருவதில், இது முதல் நிலையில் உள்ளது. 70 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை நீங்களும் பயன்படுத்தலாம். ஆனால், அனைத்தும் சீன மொழியில் இருக்கும். அதனை கூகுள் மூலம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் பார்க்கலாம். நான் தமிழிலும் மொழி பெயர்த்துப் பார்த்தேன். இணைத்துள்ள படங்களைப் பார்க்கவும்.
 

7

கேள்வி: வேர்ட் 2007 -ல் அமைக்கப்படும் டாகுமெண்ட்களில்,  நிறுவனத்தின் பெயரை வாட்டர்மார்க் ஆக இணைக்க இதற்கான செட்டிங்ஸ் அமைப்பு வழி?


பதில்: வேர்ட் டாகுமெண்ட்டில் வாட்டர்மார்க் அமைப்பதற்கான வழிமுறைகள் எளிது என்றாலும், பலர் இந்த நல்ல வசதியைப் பயன்படுத்துவதில்லை. 

வாட்டர்மார்க் அமைக்க மாறா நிலையில், சில வழிகளைக் கொண்டிருந்தாலும், நம் விருப்பப்படியும் இதனை அமைக்கலாம். நாம் விரும்பும் டெக்ஸ்ட், எழுத்துரு, வண்ணம் என எதனை வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம். 

1. ரிப்பனில், “Page Layout” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

2. “Page Background” குரூப்பில் “Watermark” என்ற கட்டளையில் கிளிக் செய்திடவும். இங்கு மாறா நிலையில் “CONFIDENTIAL 1”, “DO NOT COPY”, or “URGENT 1” ஆகிய வாட்டர்மார்க் அடையாளங்கள் கிடைக்கும். இதில் ஒன்றை நீங்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கலாம். அல்லது, “Custom Watermark” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது “Printed Watermark” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 

இங்கு பலவித ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றில் நீங்கள் விரும்பும் வகையில் உள்ளதைத் தேர்ந்தெடுக்கலாம்.
“No watermark” தேர்ந்தெடுத்தால், அப்போதைய வாட்டர்மார்க் நீக்கப்படும். இதே செயல்பாட்டினை, ரிப்பனில் உள்ள “Remove Watermark” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம். 

உங்கள் நிறுவனப் படம் ஒன்றை வாட்டர்மார்க்காக அமைக்க விரும்பினால், “Select Picture” என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் அளவை, விருப்பப்படி மாற்றி அமைக்க, “Scale” என்பதில் கிளிக் செய்திடவும். தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட்டை வாட்டர்மார்க்காக அமைக்கலாம். “Text” என்பதை அடுத்து நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்க வேண்டும். இதன் பின், டெக்ஸ்ட் வண்ணம் மற்றும் அது எப்படி அமைய வேண்டும் என்பதனை அமைக்க ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றை அமைத்த பின்னர், ஓகே அழுத்தி டயலாக் பாக்ஸை மூடவும். இனி டாகுமெண்ட்டில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் நீங்கள் அமைத்த விருப்பப்படி வாட்டர்மார்க்காக அமைக்கப்படும்.
 


மொபைல் போன் பேட்டரி பாதுகாப்பு


KgPp0M2.jpg


மொபைல் போன் பயன்பாடு அத்தியாவசிய ஒன்றாக இன்று வளர்ந்துள்ளது. மொபைல் போன் ஒன்றில், மிக முக்கிய உறுப்பாக அதன் பேட்டரி உள்ளது. சரியாக நாம் இதனைக் கவனிக்கவில்லை என்றால், நமக்குத் தேவையான முக்கிய வேளைகளில், இதன் மின் சக்தி காலியாகி, மொபைல் போனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே பேட்டரிகளை அவ்வப்போது சார்ஜ் செய்திட வேண்டியதுள்ளது. சார்ஜ் செய்தாலும், அதனைத் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தும் வகையில் சில முக்கிய செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொண்டால் தான், பேட்டரி நம் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் நமக்கு கை கொடுக்கும். அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.


நீங்கள் செல்லும் இடம், உங்களுடைய மொபைல் போனுக்கான சிக்னல் கிடைக்காத அல்லது தொடர்ந்த சிக்னல் கிடைப்பதில் சிரமமான சூழ்நிலை உள்ள இடமாக இருப்பதாக உணர்ந்தால், மொபைல் போன் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும். ஏனென்றால், இது போன்ற சூழ்நிலைகளில், உங்கள் மொபைல் போன் வழக்கத்திற்கு அதிகமான மின் சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களை எப்படியாவது பெற்றுவிட முயற்சிக்கும். அது பெரும்பாலும் தோல்வியையே தழுவும். எனவே, மொபைல் போனை இது போன்ற இடங்களில் ஸ்விட்ச் ஆப் செய்வது, பேட்டரியின் மின்சக்தி வீணாகச் செலவிடப்படுவது தடுக்கப்படும்

.
அதே போல, மொபைல் போனில், காலண்டர், நோட்ஸ் போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தினாலும், அல்லது ஆங்கிரி பேர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதாக இருந்தாலும், மொபைல் போனை ஏர்பிளேன் மோட் ("airplane mode")எனப்படும் நிலையில் அமைத்து இவற்றை செயல்படுத்தலாம். இதனால், சிக்னல் தொடர்புகள் நிறுத்தப்பட்டு, மொபைல் போனில் உள்ள அப்ளிகேஷன்கள் மட்டும் இயங்கும் நிலை ஏற்படும்.


z2G5wKw.jpg

தேவைப்பட்டால் ஒழிய, மொபைல் போனில் இயங்கக் கூடிய புளுடூத், வை பி, ஜி.பி.எஸ். மொபைல் டேட்டா போன்ற அப்ளிகேஷன்களை நிறுத்தலாம். இவை தேவைப்படாமலேயே, தொடர்ந்து இயக்கநிலையில் இருந்தால், பேட்டரியின் திறன் வீணாகும்

.
மொபைல் போன் திரையின் ஒளிநிலையை (brightness) குறைத்து அமைக்கவும். பெரும்பாலான போன்களில், இதற்கென "auto" எனப்படும் தானியங்கி நிலை ஒன்று தரப்பட்டிருக்கும். பலர், இதனைச் செயல்படாத தன்மையில் வைத்து, ஒளிநிலையை அதிகமாக்கி வைப்பார்கள். இது தேவையற்றது. இதற்குப் பதிலாக, மிகவும் குறைத்து செட் செய்திடலாம். அதனை செட் செய்திடும் இட த்தில், ஒரு ஸ்லைடிங் பார் ஒன்று தரப்பட்டிருக்கும். இந்த கோட்டினை இழுத்து அமைக்கும்போதே, தோன்றும் ஒளி நிலை நமக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதனைக் கண்டறிந்து செட் செய்திடலாம்.


cvPLy74.jpg


மொபைல் போன் ஒன்றின், பின்னணியில் பல அப்ளிகேஷன்கள் தானாகவே இயங்கிக் கொண்டிருக்கும். இதனால் தான், பேஸ்புக் போன்ற சமூக இணைய தளத்தில் நமக்கான தகவல் தரப்படும் நிலையில், மொபைல் போனுக்கு அறிவிப்பு கிடைக்கும். இது கூகுள் போன்ற அப்ளிகேஷன்களுக்கும் பொருந்தும். ஆனால், எப்போதோ வரப்போகிற தகவலுக்காக, எப்போதும் தயார் நிலையில், இது போன்ற அப்ளிகேஷன்களைப் பின்னணியில் இயக்கத்தில் வைத்திருப்பது, நம் மொபைல் போன் பேட்டரியின் திறனை வீணடிக்கும். எனவே, தேவைப்படும்போது மட்டும், இந்த அப்ளிகேஷன்களை இயக்குவது நல்லது. 

பேச்சு இல்லாமல், வேறு சில இயக்கங்களை நாம் மொபைல் போனில் அவ்வப்போது மேற்கொள்கிறோம். சிலர் மிக அதிகமாகவே மேற்கொள்வார்கள். இணையத்தில் உலா வருதல், கேம்ஸ் விளையாடுவது, கேமரா பயன்படுத்தி போட்டோ எடுப்பது போன்றவை இதில் அடங்கும். குறிப்பாக போட்டோ எடுப்பது, அதிகமான மின் சக்தியை எடுத்துக் கொள்ளும். ப்ளாஷ் பயன்படுத்துவது இதில் மிக அதிக மின்சக்தியை எடுக்கும் ஒரு செயல்பாடாகும். இவற்றைக் கூடுமானவரை தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர், இவற்றை செயல்படா நிலையில் ஆப் செய்து வைக்க வேண்டும். கேமரா சாதனம் போன்றவற்றின் இயக்கத்தை ஆப் செய்த சில விநாடிகளிலேயே மீண்டும் ஆன் செய்வது, அதிகப்படியான மின் சக்தியைப் பயன்படுத்தும். எனவே, ஒருமுறை ஆப் செய்த இந்த அப்ளிகேஷன்களை, சிறிது கால இடைவெளி விட்டுத்தான், மீண்டும் ஆன் செய்திட வேண்டும்.

k1nbvna.jpg

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களில், இந்த ஒவ்வொரு அப்ளிகேஷனும் எவ்வளவு மின் சக்தியைப் பயன்படுத்துகிறது என்பதனைக் காணலாம். அதை அடிக்கடி பார்த்து, பின்னணியில் வீணே இயங்கும் அப்ளிகேஷன்களை நிறுத்தலாம். 

பேட்டரியின் பவர் மிகவும் குறைவாக இருக்கும்போது, அதனை ரீ சார்ஜ் செய்திடும் நேரம் வரை, பேச்சுக்களை அளவோடு வைத்துக் கொள்ளவும். இல்லை எனில், முக்கியமானவர்கள் அழைக்கும்போது, நம் மொபைல் போன் பேட்டரியில், பவர் இல்லாமல் போய்விடும்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா? தெரிந்தே செய்திடும் தவறுகள்

CW2RQyB.jpg


தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங்களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.



1. மோசமான சூழ்நிலையில் கம்ப்யூட்டரை இயக்குதல்: 


கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல் வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும்.


2. ஒரே அழுக்கு: 


கம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், சிபியு உள்ள கேபின் - இவை யாவும் மோசமான தூசு மற்றும் அழுக்கு படிந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளிர் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட பல கீ போர்டுகள், அழுக்குப் படிந்ததனால், முற்றிலும் நிறம் மாறி, தங்கிவிட்ட அழுக்கு கறைகளுடனேயே காணப்படுகின்றன. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பொதுக் கழிப்பறைகளில் அமரும் இடத்தில் காணப்படும் கிருமிகளைக் காட்டிலும் 60 மடங்கு மேலாகக் கிருமிகள், கீ போர்டில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒருமுறை என இல்லாவிட்டாலும், வாரம் ஒருமுறையாவது, இவற்றைச் சுத்தப்படுத்தும் திரவம் கொண்டு சுத்தப்படுத்தினால், இயக்குபவரின் உடல் நலம் பாதுகாக்கப்படும் அல்லவா?


3. தொல்லை தரும் வகையில் போன் பேசுதல்:


 நம்மில் பலர், பெரும்பாலானவர்களின் வெறுப்புக்கு ஆளாவது, நாம் மொபைல் பயன்படுத்தும் முறைகளினால்தான். சாப்பிடும் மேஜைகளிலிருந்து போன்களைத் தள்ளியே வைக்கவும்; கடைகள், ஜிம், பொது அலுவலகங்கள், லிப்ட்கள், மருத்துவமனை, பஸ், ஆட்டோ, ட்ரெயின் போன்ற இடங்களில், மொபைல் போனில் உரக்கப் பேசுவதை எப்போது நிறுத்தப் போகிறோம்?


4. பேக் அப்பா? அப்படின்னா?


நம்மில் பெரும்பாலோர், கம்ப்யூட்டரில் அமைக்கப்படும் பைல்களுக்கான பேக் அப் காப்பி எடுப்பதே இல்லை. சரியான கால இடைவெளியில், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும், இன்னொரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றி வைப்பது, நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இதனால், நாம் அரும்பாடு பட்டு பாதுகாத்து வைத்த அந்நாள் படங்கள், போட்டோக்கள், டேட்டாக்கள், பைல்கள், கடிதங்கள், நிதி நிர்வாகத் தகவல்கள் என அனைத்துமே சில வேளைகளில் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். தெரிந்தும் ஏன் பேக் அப் எடுப்பதில்லை? (பல தன்னாட்சி கல்லூரிகள் கூட தங்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் முக்கிய தகவல்களுக்கு பேக் அப் எடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.)



5. விட்டேனா பார் வீடியோ: 


அடுத்த அடுத்த லெவலை முடித்துத் தான் வருவேன் எனப் பலர், பல கம்ப்யூட்டர் கேம்ஸ்களை வெறியோடு தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் கூட விளையாடுகிறார்கள். இடையே ஓய்வு எடுக்காமல், தண்ணீர் அருந்தாமல், கால்கள் மற்றும் உடம்பை அசைக்காமல் நாற்காலியில் அமர்ந்தே இருப்பது, உடலுக்குத் தீங்கினை விளைவிக்கும் என்பது தெரிந்தும் ஏன் பலர் இந்த பழக்கத்தினை மாற்றுவதில்லை?



6.ஷட் டவுண்: 


லேப்டாப் கம்ப்யூட்டர்களை, அதில் வேலை முடிந்த பின்னர், ஜஸ்ட் அப்படியே திரை உள்ள மேல் மூடியை மூடி எடுத்துச் செல்லலாம். ஆனால், இது நல்லதல்ல; லேப்டாப் வெகுநாட்கள் உழைக்க வேண்டும் என எண்ணினால், அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஷட் டவுண் செய்திடும் பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும். 



7. படுக்கையே தொழில் கூடமாக:


லேப்டாப், ஸ்மார்ட் போன், ஐபேட் என அனைத்தையும் படுக்கைக்கு உறங்கச் செல்லும் போது கொண்டு செல்வது, வெகு நேரம் விழித்திருந்து பயன்படுத்துவது, சரியான நேரத்தில் தூங்க மறுப்பது, பின்னர் தூக்கம் சரியாக வருவதே இல்லை என்று குற்றம் சாட்டுவது போன்ற செயல்கள் தவறு என்று தெரிந்த பின்னரும், தொடர்ந்து இந்தப் பழக்கத்தைப் பலரும் கடைப்பிடிப்பது ஏன்? (குறிப்பாக சில மருத்துவர்கள், இரவு நேரங்களில் கண் விழித்து லேப்டாப் கம்ப்யூட்டரில் பணியாற்றி, அதனுடனேயே உறங்குகின்றனர். மறு நாளில், நோயாளிகளைப் பார்க்கையில் எரிச்சல், கண்களிலும் மனதிலும் தோன்றாதா?)



8. சிஸ்டம் அப்டேட் கேன்சல்:


பல வேளைகளில், நமக்கு நாம் பயன்படுத்தும் சிஸ்டம், அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் ஆகியவற்றிற்கு அப்டேட் பைல்கள் உள்ளன. அப்டேட் செய்திடலாமா? என்று கேள்வி வரும். அந்த வேலையை மேற்கொண்டு, பின்னர், கம்ப்யூட்டரை மறுபடியும் ரீஸ்டார்ட் செய்திட சோம்பேறித்தனப்பட்டு, பலர் அப்டேட் செய்வதைக் கேன்சல் செய்துவிடுகின்றனர். இது தவறு மட்டுமின்றி, தேவையற்ற அபாயத்தினையும் வரவழைக்கும். நிறுவனங்கள் அப்டேட் பைல்களை அளிக்கையில், தாங்கள் தயாரித்து வழங்கிய புரோகிராம்களில் கூடுதல் வசதிகளை மட்டும் அளிப்பதில்லை. தங்கள் புரோகிராம்களில் உள்ள எந்த பலவீனமான இடத்தைப் பயன்படுத்தி, வைரஸ்கள் நுழைகின்றனவோ, அவற்றையும் சரி செய்து அப்டேட் பைல்களை அளிக்கின்றனர். இவற்றை அப்டேட் செய்திடும் பணியை கேன்சல் செய்வதன் மூலம், நாம் வசதிகளை மட்டும் இழப்பதில்லை; வைரஸ் எதிரான பாதுகாப்பினையும் இழக்கிறோம்.



9. உங்கள் பாஸ்வேர்ட்: 


ஏறத்தாழ ஐந்துக்கும் மேற்பட்ட பாஸ்வேர்ட்களை ஒருவர் ஒரு நாளில் குறைந்தது பயன்படுத்த வேண்டியதுள்ளது. உங்கள் பாஸ்வேர்ட் 1234 என உள்ளதா? உங்கள் பெயர், பிறந்த நாள், தொலைபேசி எண் என உள்ளதா? நிச்சயம் அவை பாதுகாப்பானவை இல்லை. பல ஆண்டுகளாக ஒரே பாஸ்வேர்டையே பயன்படுத்தி வருகிறேன் என்று பெருமை அடித்துக் கொள்கிறீர்களா? இதனை எச்சரிக்கும் செய்திகளை உதாசீனம் செய்கிறீர்களா? இது தவறில்லையா?



10. பேட்டரி ட்யூனிங்:


 லேப்டாப் கம்ப்யூட்டரின் பவர் ப்ளக்கைச் செருகி, அதனைப் பயன்படுத்துவது மிக எளிதுதான். ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது. பேட்டரிகளை அதன் திறன் முழுமையாகக் கிடைக்கும் வகையில், அதனை சார்ஜ் செய்வதுடன் ட்யூனிங் செய்திடவும் வேண்டும். சில மாத இடைவெளியில், பேட்டரிகளை முழுமையாகச் சோதனை செய்து, அவற்றின் திறனை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தயார் செய்திட வேண்டும். ஆனால், இது தெரிந்திருந்தும் ஏன் பலர் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதில்லை?